ட்டாத வீட்டுக்கு வங்கியில் பணம் போட்டதாக கணக்கு காட்டி பல கோடி ரூபாய் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சுருட்டப்பட்டிருப்பதை நக்கீரன் ஏற்கனவே ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியிருக்கிறது. பிரதமரின் ஹாவாஸ் யோஜனா திட்டத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது என்று புகார்க் குண்டை தற்போது வீசியிருக்கிறார் ஒரு எம்.பி.

Advertisment

modi

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸின் செயல் தலைவர்களில் ஒருவருமான விஷ்ணுபிரசாத்தான் புகார் கிளப்பியவர். அவர் நம்மிடம், “""பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்துக்கு என மக்கள் தொகை அளவீட்டின் படி, நிதியை ஒதுக்குகிறது மத்திய அரசு. அதைக்கொண்டு ஒன்றியத்துக்கு இத்தனை வீடுகள் என அனைத்து கிராமங்களிலும் உள்ள, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. இதை ஊரக வளர்ச்சித்துறை செயல்படுத்துகிறது. இங்கே உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு, 3 ஆண்டுகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தை தனி அதிகாரிகள்தான் நடத்தினார்கள். இவர்களின் நிர்வாகத்தின் கீழ்தான் இந்த வீட்டு ஊழல்கள் நடந்துள்ளன.

எனது தொகுதியான ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி ஒன்றியம் ஒழப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அம்சா என்கிற பெண்மணிக்கு வீடு ஒதுக்கப்பட்டதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்மணியின் கணவர் இறந்துவிட்டார், அதனால் போதிய வருமானம் இல்லாத அம்சா வீட்டைக் கட்டமுயலவில்லை. ஆனால், அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை, அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு அம்சாவிடம் கொடுத்திருக்கிறார்கள்.

Advertisment

n

வீடு வழங்கும் திட்டத்தை முறைகேடாகப் பெற்றிருக்கும் பெண்மணிக்கு ஏற்கனவே வீடு உள்ளது, அந்த வீட்டோடு கூடுதலாக இந்த வீட்டுக்கான பணத்தை வாங்கி, வீட்டை அகலப்படுத்திக் கட்டியுள்ளார், இப்படி பலரின் பெயரில் ஊழல்கள் நடந்திருக்கிறது. அதேபோல் இந்தத் திட்டத்துக்கான நிதியை, ஜம்னாமத்தூர் ஒன்றியத்துக்கு மாற்றி 700 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. அதை எல்லாம் சரிபார்த்தபோது, ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு இரண்டு வீடுகள் ஒதுக்கப்பட்டதையும், வீடு கட்டாமலே பணம் எடுக்கப்பட்டதையும் கூட அறியமுடிந்தது'' என்று விவரித்தவர், இது தொடர்பாக தான் எடுத்த முயற்சிகள் பற்றியும் விவரித்தார்...

""இப்படிப்பட்ட ஊழல்கள் குறித்த ஆவணங்களோடு, கடந்த பிப்ரவரியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து, புகார் மனு தந்தேன். இதைத் தொடர்ந்து என் புகார் மனுவிற்கு திருவண்ணாமலை மாவட்ட டி.ஆர்.டி.ஓ திட்ட இயக்குநரான ஜெயசுதா ஜூலையில் பதில் கடிதம் அனுப்பினார். அதில், தனது விசாரணையின் அடிப்படையில் முறையாகத்தான் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்ததோடு, நான் வீடு இல்லாமல் இருந்தேன், தற்போது அரசின் நிதியுதவியோடு வீடு கட்டப்பட்டு மகிழ்ச்சியாக வசித்து வருகிறேன் என அம்சா என்கிற பெண்மணியிடம் கடிதம் ஒன்றையும் வாங்கி எனக்கு அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் ஏ.அம்சா என கையெழுத்து போடப்பட்டிருந்தது. உண்மையில் வீடு ஒதுக்கப்பட்டது வி.அம்சா என்கிற பெண்மணிக்குதான். தங்கள் தவறை மறைக்க சரியாக விசாரணை நடத்தாமல் பொய்யான நபரையே சரியான நபராக காட்டுகிறார்கள் அதிகாரிகள்.

Advertisment

இது குறித்தும் நான் கலெக்டரிடம் தெரிவித்தபோது, ஜம்னாமத்தூர் ஒன்றியத்தில் 3 பஞ்சாயத்து செயலாளர்களை சஸ்பென்ட் செய்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுதான் தீர்வா எனக்கேட்டால் பதிலில்லை. பஞ்சாயத்து செயலாளர்கள் வெறும் கருவிகள்தான். திட்டத்தை செயல்படுத்தி ஊழல் செய்தவர்கள் அதிகாரிகள்தான். திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் ,,2016 - 2020 காலக்கட்டத்தில், ஓர் ஆண்டுக்கு 100 கோடி என்கிற கணக்கில் 4 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அளவுக்கு ஊழல் நடந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து பிரதமர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், முதல்வர் என பலருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். கரோனாவை காரணம் காட்டி விசாரணை நடத்தாமல் இருப்பதால், நான் இது தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளேன்'' என்றார் அழுத்தமாக.

இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட டி.ஆர்.டி.ஏ திட்ட இயக்குநர் ஜெயசுதாவின் கருத்தையறிய அவரைப் பலமுறை தொடர்பு கொண்டும், அவர் போனை எடுக்கவே இல்லை. அவரைப் பற்றி அவர் அலுவலகத் தரப்பில் விசாரித்த போது, ""அவர் யாரையும் மதிக்க மாட்டார். அவரிடம் யார் கேள்வி கேட்டாலும் மிரட்டுவார். உங்களுக் கெல்லாம் ஆண்மை இருக்கான்னு எங்களை அசிங்கமாத் திட்டுவார்'' ’என்றார்கள் சங்கடத்தோடு. இவரைப் போன்ற அதிகாரிகளுக்கு ஆளுங்கட்சிப் புள்ளிகளின் செல்வாக்கு இருப்பதால், இவர்கள் கொஞ்சமும் அலட்டிக்கொள்வதில்லை.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி தாலுகா தலையாமங்கலத்தில் இறந்தவர் பெயரில் வீடு கட்டி- அவர் வங்கிக் கணக்கில் பணம் போட்டதாக மோசடி செய்தது அம்பலப்படுத்தப்பட்டது. குடிசையில் குடியிருப்போருக்கு வீடு வழங்கப்பட்டதாக வாழ்த்துக் கடிதம் வருகிறது. பிரதமர் வீடு வழங்கும் திட்ட ஊழல்களை விசாரிக்க விசாரிக்க தலை கிறுகிறுக்கிறது.

-து. ராஜா